மாலதி தமிழ்க் கலைக்கூடம் ஆண்டு தோறும் மாணவர்களின் தமிழ்த்திறனை ஊக்கப்படுத்தி வளப்படுத்;துவதற்காக தமிழ்த்திறன் எனும் போட்டி நிகழ்வினை நடாத்தி வருகின்றது. சென்ற இரண்டு ஆண்டுகள் கொரோணா தொற்று நோய் காரணமாக இப் போட்டிகள் நடைபெறாது தடைப்பட்டிருந்தது.
இச் சூழலில் 2021இல் இணையவழியில் ZOOM செயலி ஊடாக தமிழ்த்திறன் போட்டியில் ஒரு பிரிவான பேச்சுப்போட்டி நடாத்தப்பட்டிருந்தது அதிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். இன்றைய சூழல் நிகழ்வுகளை நடாத்த கூடிய நிலையை தோற்றுவித்துள்ளதால் தமிழ்த்திறன் போட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ள பேச்சுப்போட்டி, பொதுஅறிவுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி எனும் நான்கு போட்டிகளையும் உள்ளடக்கியதான இவ் போட்டியானது 12.03.2022 சனி அன்று கோசன்ஸ் நகரில் நடைபெற்றது.
போட்டிகள் ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம், மாலதி தமிழ்க் கலைக்கூட பாடல் எனும் அடிப்படை செயல் நிறைவேற்றப்பட்டு மாலதி தமிழ்க் கலைக்கூட மேலாளர் அருளானந்தராசா தில்லைநடராசா அவர்களின் வரவேற்போடு கூடிய நிகழ்வுசார்ந்த கருத்துக்களுடன் நிகழ்வுகள் ஆரம்ப நிலையை அடைந்தது.
நிகழ்வின் தொடக்கமாக உங்கள் புத்தகம் எனும் மின்னிதழ் வெளியிடப்பட்டது இதனை மாலதி தமிழ்க் கலைக்கூட நிர்வாகப்பொறுப்பாளர் நிரஞ்சன் கந்தையா அவர்கள் வெளியிட்டு அதன் நோக்கத்தையும் அதன் உள்ளடக்கத்தினையும் பற்றி தெரியப்படுத்தினார். அதில் குறிப்பாக கொரோணா பேரிடர் முடக்க காலத்தில் மாணவர்களது உள்ளத்தில் தோன்றிய ஆக்கங்களின் வெளிப்பாடே பதிவாகி உள்ளது எனும் தகவவலையும் தெரிவித்து, இம் முயற்சிக்கு உதவியவர்களுகக்கு நன்றி பாராட்டியதோடு இவ் மின்னிதழை மாலதி தமிழ்க் கலைக்கூட இணையத்தளத்தில் பார்வையிடலாம் எனும் தகவலையும் கூறியிருந்தார்.
தொடர்ந்து நிகழ்வில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கட்டுரைப்போட்டி, 2021ஆம் ஆண்டு இணையவழி பேச்சுப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்கள்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதனை தொடர்ந்து இவ் ஆண்டுக்கான பேட்டிகளுக்கு மண்டபம் தயாரகியது. கொரோனா இடர்கால நெருக்கடிக்கு பின்னான காலத்தில் மாலதி தமிழ்க் கலைக்கூடம் கூடுதலான மாணவர்களை உள்வாங்கி பெற்றோர் பார்வையாளர்கள் ஒன்றுகூடி நடந்த நிகழ்வாக 19.02.2022 சனி அன்று நடந்த உள்ளரங்க உதைபந்தாட்ட நிகழ்வும் இவ் தமிழ்த்திறன் போட்டியும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப் போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர் அத்தோடு தமிழ்த்திறன் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பதக்கம் அணிவித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களை வழங்கியதுடன், கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.